.

5 July 2009

மரத்தடி எறும்புகள்

ஒரே தேவை
எல்லாருக்கும் பொதுவாய்;
தீனி!
சுவையான தீனி.
தேடித் தேடி
அலுத்துப் போகும் உணரிகளுடன்
பயணங்கள் தொடரும்.

எங்கேயோ ஓர் எறும்பு
கண்டு பிடித்திருக்கும்
கரும்புச் சாற்றை;
இழுத்து வந்தால்
குடித்துவிட்டு
சும்மாயிருக்காது
மற்ற எறும்புகள்.

கொண்டு வந்தவை,
கொண்டு வந்தவர்
எல்லாவற்றுக்குமாய்
பதில் விருந்து காத்திருக்கும்.
தப்பிருந்தால்
தட்டிக் கேட்கப்படும்.

ஏதாவது தீனிக்கு
இழுத்துச் செல்கையிலும்
ஓர் ஒழுங்கு.
வழிகாட்டி எறும்புகளின்
பார்வை வரிசையில்
வழிப்பயணம் போகும்
மற்றைய எறும்புகள்.

வழிதவறும் போதெல்லாம்
உணரிகளை நீட்டி
முன்வரும்
வழிகாட்டி எறும்புகள்.
உணரிகளும்
உணரிகளும்
பேசிக்கொண்டதில்
தவறிய வழி புரிந்து போகும்.

நண்டுகளைப் போல
ஒன்றையன்று
பிடித்திழுக்காமல்,
ஒன்றன் பின் ஒன்று
போகத் தெரிந்ததால்!
ஒன்றுக்கு ஒன்று
வழிவிட முடிந்ததால்!

மகிழ்வோடு தொடர்கிறேன்
மரத்தடி எறும்புகளை!